கடந்து வந்த பாதை 2018
அனுபவமே சிறந்த ஆசான். ஒவ்வொரு வருடமும் நாம் கடந்து வரும்போது எதாவது ஒரு, மறக்க முடியாத அனுபவத்தையேனும் சுமந்து வருவோம். ஆனால், இந்த வருடம் எனக்கு பல பல மறக்க முடியதா அனுபவங்களை பரிசளித்திருக்கிறது. இன்பம் துன்பம் ஏமாற்றம் என பலவற்றை கடந்து வந்துவிட்டேன். வாழ்வு முழுவதும் அனுபவங்களால் ஆனது, அதற்கு இந்த கலவையான நிகழ்வுகளே உதவுகின்றன.
உண்மையை சொல்லவேண்டுமெனில், இவ்வாண்டின் தொடக்கம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. பல கேள்விகளுடனும் சங்கடங்களுடனுமே தொடங்கியது. நான் யாரை முழுமனதுடன் நம்பினேனோ அவரையே மனம் நோகச்செய்து வெறுக்கச்செய்தேன். மறக்க முடியாத அந்த நிகழ்வு வாழ்வின் பல கேள்விகளுக்கு எனக்கு பின்னாளில் பதிலுரைக்கும் என்று அப்பொழுது அறிந்திருக்கவில்லை. ஆனால் அந்த இக்கட்டான நிலையிலும் என்னை நிலைப்படுத்த என் உடன் நின்று கை கொடுத்த என் நண்பர்களையும் உறவுகளையும் நினைவுகூர்ந்தே ஆகவேண்டும்.
அவர்கள் ஐந்து பேரும் இல்லையெனில் என் வாழ்வின் போக்கு வித்தியாசமானதாக இருந்திருக்கும். மிக நீண்ட கால நட்பிது. நன்றி எல்லாம் சொல்லி அவர்களை தள்ளி வைத்துவிட முடியாது.
என் வாழ்வின் மிக முக்கியமான ஒருவர், ஏன் என் வாழ்வே அவர்தான் என்று இருக்கும் ஒருவருடன் என் வாழ்வை பகிர்ந்த நாள் இந்த வருடமே, எங்களின் திருமண நாள், இன்றுடன் எட்டு மாதங்களை கடந்துவிட்டோம். எத்தகைய பந்தம் என்று யாராலும் புரிந்துகொள்ள முடியாத உறவு எங்களுடையது. எட்டு வருட அறிமுகம் ஆறு வருட காதல் கடந்து, பலவித மன போராட்டங்களுக்கு பின் நாங்கள் இணைந்த அந்த நாளின் உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்னவள், என்னுள் அவள், அவளுள் நான்.
எங்கள் திருமணத்தை மிக சிறப்பாக நடத்தி வைத்த அனைத்து உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள்.
மிக முக்கிய தருணத்தில், மனமுடைந்து நாங்கள் இருவரும் வருந்திய பொழுது, எங்கள் இருவருக்கும் நம்பிக்கை தரும் வார்த்தைகள் தந்து வழிநடத்திய இருவர், அண்ணா அண்ணி. மருந்ததை விட இவர்களின் வார்த்தைக்கு எதையும் குணமாக்கும் சக்தி உள்ளது.
இவ்வருடத்தில் கற்கவும் கற்பிக்கவும் நிறைய இருந்தது. கற்பித்தத்ததை விட நான் கற்றதே மிக அதிகம். புதிய உறவுகள், அவர்களின் அன்பு, கோவம் என புரிந்துகொள்ள நிறைய இருந்தது. திருமணத்திற்கு பின் என் மனம் அறிந்து நான் யாரையும் சங்கட படுத்தவில்லை என்றே நான் நினைக்கிறேன்.
நான் நீண்ட வருடங்களாக, என் திருமணத்திற்கு இணையாக நினைத்த மிக முக்கியமான ஒரு நிகழ்வும் சிறப்பாக நடந்தேறியது. அவரும் வாழ்வாங்கு சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்றே பிராத்தித்துக்கொள்கிறேன். என் மனதின் மிகப்பெரிய பாரத்தை இறக்கி வைத்ததாகவே உணர்கிறேன். வாழ்க வளமுடன்.
இதை பகிரவேண்டிய கட்டாயம், இதனால் என்னவள் என்மீது சிறு கோபம் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. சாதாரணமாக தொடங்கிய அந்த உறவு என் மனதின் சமநிலையை பாதிக்கும் அளவிற்கு வளர்ந்தது என்று கூறாமல் இருக்க முடியவில்லை. உண்மையில் மிகவும் வித்தியாசமாக இருந்த அவரை புரிந்துகொள்ளவே முயன்றேன். முயற்சிக்கிறேன். இப்போதைக்கு இது போதும். என்னை மீண்டும் எழுத தூண்டிய மிக முக்கிய நபர்.
பிகு: என்னவளுக்கு அவர் யார் என்று தெரியும் ஆதலால், போட்டு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. மேலும் என்னவளின் தணிக்கைக்கு பிறகே, இந்த பதிவு பதிப்பிக்கப்படுகிறது.
இன்னும் இருவரை பற்றி கூறியே ஆகவேண்டும். என்னவளின் மூலம் கிடைத்த நட்பு. வெகுளித்தனமான, எதையும் எதிர்பார்க்காத, அன்பை மட்டுமே கொண்ட அவ்விரு உறவை என்றும் நாங்கள் இழந்துவிட கூடாது. நட்பாய் உள் நுழைந்து குடும்பத்தில் ஒருவராய் மாறிய இருவர். உங்கள் கரைபடியா அன்பிற்கு நாங்கள் இருவரும் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.
இவர்களை தனியே குறிப்பிட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. ஏனெனில் இவர்கள் இன்றி நான் இல்லை. அம்மா அப்பா மற்றும் தம்பி. இவர்களை பற்றி விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. வார்த்தைகளை மௌனிக்க செய்யும் உறவுகள் என்றும் உண்டு. இவர்களை போன்றே, நான் துவண்டு இருந்த காலத்தில் என்னை வலிமை படுத்திய பெரியப்பா பெரியம்மாவையும் நிச்சியமாக நினைவு கூர்ந்தே ஆகவேண்டும்.
இவ்வாண்டில் விழா கொண்டாட்டங்கள், சிறு சிறு சண்டைகள், ஏமாற்றங்கள் என்று வருடம் மிகவும் சுறுசுறுப்பாகவே சென்று விட்டது. வரும் ஆண்டு இன்னும் சிறப்பாக இன்னும் சில புதிய உண்மையான உறவுகளுடன் சிறக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும், காலம், கற்பிக்கும் வழிமுறைதான் மாறுகிறதே தவிர அது கற்பிக்கும் விஷயம் ஒன்று தான். “இந்நிலையும் மாறிவிடும்”.
அனைவருக்கும் வரும் புத்தாண்டு மிக சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.
Related
அண்மை பதிவுகள்
வகைகள்
- அறிமுகம் (1)
- அறிவியல் (2)
- இணையம் (2)
- எண்ணவோட்டங்கள் (8)
- புதினம் (1)
- மரகத கோட்டை (1)
Leave a Reply