பொன்னியும் போராட்டமும்
இந்த பதிவுக்கு பொன்னியும் போராட்டமும் என்பதற்கு பதில் பொன்னியும் போலி அரசியலும் என்னும் தலைப்பே பொருத்தமாக இருக்கும்.
குடகு மலையில் பிறந்து கர்நாடகத்தில் தவழ்ந்து, தமிழகத்தில் ஓடி, பாண்டிச்சேரியில் கடலாரசனுடன் கலக்கும் பொன்னி, தான் பார்க்குமிடமெங்கும் இயற்கையன்னையை குதூக்களிக்கவைக்கிறாள். அவள் தோன்றிய காலம் தொட்டு பல போர்களை பார்த்திருந்தாலும் அவளுக்காக நடக்கும் போராட்டம் என்ற பெயரிலான கலவரங்கள் புதிதாக இருக்கலாம். தன்னிடம் சரணடைத்தவர்களை வாழவைக்க மட்டுமே தெரிந்த அவளுக்கு, மனிதர்களின் பாவங்களை தான் எடுத்துகொண்டு வளப்படுத்திய அவளுக்கு கடந்த ஐம்பது வருடங்களாக நடப்பது எல்லாம் புதிராகவே இருக்கும்.
பல வருடங்களாக காவிரி பிரச்சனை நடந்துவந்தாலும், என்னுடைய அறிவுக்கு பல செய்திகள் இந்த முறை நடந்த கலவரத்தின் முலமே புலப்படுகிறது. ஒருவேளை சிறு அரசியல் தெளிவும் வந்திருக்கலாம். தமிழ்நாட்டின் சகோதரர்களான கர்நாடகா, ஆந்திர, கேரளா முதல் உலகின் பல பகுதிகளில் தமிழர்களின் மீதான தாக்குதல் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இருப்பினும் நமது சகொதரர்கள்ளே தாக்கிகொள்ளும் போது அதன் வலி அதிகமாகவே தான் இருக்கிறது.
கிட்டத்தட்ட ஒருவார காலமாக கர்நாடகாவில் தமிழர்களை தாக்குகிறார்கள், கடைகள் சூறையாடப்படுகின்றன, வாகனங்கள் கொளுத்தப்படுகின்றன என்று செய்தி வந்துகொண்டே இருக்கின்றன. தமிழகத்திலும் சில இடங்களில் கன்னடவர்கள் மீது தாக்குதல் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் எதற்காக ? உச்ச நீதிமன்றம் காவிரியில் இருந்து குறைந்தது மனிதாபிமான முறையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று சொன்னதில் இருந்து ஆரம்பித்தது.
இந்த கலவரத்திற்கு யார் காரணமாக இருக்க முடியும் என்று பார்க்கும் முன்னர், இதனால் போராட்டகாரர்கள் என்று சொல்லப்படும் கலவரகாரர்கள் பெற்றது என்ன ?
தமிழர்கள் மீதான தாக்குதலால் அவர்களின் அரசு இழந்தது பல கோடிகள், எரிந்து சாம்பலான பொருட்களை நீக்குவதில் இருந்து நஷ்ட ஈடு கொடுப்பது முதல் அங்கு காவலில் இருந்த காவலர்களுக்கும் அவர்களின் வாகனங்களுக்குமான பராமரிப்பு செலவுகள் வரை பலகோடிகளை அரசு செலவிடவேண்டி வரும். ஊரையே முடங்க செய்ததன் மூலம் கர்நாடகாவின் முக்கிய வருவாய் கொடுக்கும் தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களின் அவநம்பிக்கை. அதனால் ஏற்படும் சில ஆயிரம் கோடி வருவாய் இழப்பு. சுற்றுலா பயணிகளிடம் பெற்ற அவநம்பிக்கை, அதனால் பெற்றது சுற்றுலாவின் மூலம் வரும் வருவாய் குறைவு. இதையெல்லாம் விட கர்நாடகத்தை வாழவைப்போம் என்று கூச்சலிடும் அமைப்புகள், டயர்களையும் வாகனங்களையும் எரித்ததில் காற்று முழுவதும் மாசுபட்டு ஒன்றும் அறியா அப்பாவி மக்களுக்கு நோய்கள். கிட்டத்தட்ட பல மாதங்கள் வாகன புகையால் ஏற்படும் மாசு இந்த சில தினங்களில் நடந்துவிட்டது. இதையெல்லாம் விட இரண்டு உயிர்கள் போய்விட்டது, இதற்க்கு யார் போறுபேற்றுகொள்ள போகிறார்கள், அவர்களின் குடும்பத்தின் நிலை ? இந்த கலவரத்தால் இரவு பகல் பாராது உழைத்தவர்கள் சொத்துகள் அழிக்கபட்டன, வேறு என்ன வந்து விட்டது ? பத்து கன்னடர்களுக்கு வேலை கொடுத்தவன் இப்பொழுது நஷ்டத்தில் இருக்கிறன், அதனால் அந்த பத்து கன்னடர்களின் வேலை போனது தான் மிச்சம். இப்பொழுது வரும் சில சிசிடிவி காட்சிகளில் கடைகள் சூறையாடப்பட்டதுதான் தெரிகிறது. கொள்ளையடிக்கதான் இந்த கலவரமா ?
இது போன்ற கலவரம் நடக்க முழுக்க காரணம் இனவெறியை தூண்டிவிட்டு அதில் அரசியல் பார்க்கும் சிலர். நிச்சியமாக ஒவ்வொரு இனத்திற்கும் அந்த இனத்தின் மீதான பற்று இருக்கத்தான் செய்யும், அந்த பற்று வெறியாக மாறும்போதே இதுபோன்ற வன்முறைகள் இனத்தாக்குதல்கள் நடக்கின்றன. வெளி மாநிலத்தில் இருந்து வந்து உன்மாநிலத்தில் கடைவைப்பவனை உனக்கு பிடிக்கவில்லையா, அப்பொழுது அவனிடம் பொருள் வாங்குவதை நிருத்திகொள்ளவேண்டியது தான், அப்படி செய்தால் உன் இனக்காரன் வாழ்வான். ஆனால் வேறு இனக்காரனை தாக்குவதால் உன் இனம் வாழ்ந்துவிடுமா என்ன !
விவசாயிகள் தண்ணீர் வேண்டும் என்று போரடுவார்களே தவிர கலவரத்தில் ஈடுபட மாட்டார்கள். அது எங்கு வாழும் விவசாயிகளுக்கும் பொருந்தும். அவனுக்கு தன்னை தானே அழித்துக்கொள்ள தெரியுமே தவிர மற்றவரையில்லை. இப்பொழுது போராட்டம் என்ற பெயரில் கலவரம் செய்யும் யாருக்கும் காவிரியை பற்றியோ அதன் தேவைகளை பற்றியோ சிறிய அளவிலான புள்ளிவிவரம் தெரியுமா. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அரசியல்வாதி தூண்டிவிட்டவுடன் வில்லில் இருந்து பாயும் அம்புபோல் தமிழர்களை தாக்குவது. இது இனப்பற்று கிடையாது, இன வெறி. இதனால் பாதிக்கபடுவது என்னமோ ஒன்றும் அறியா அப்பாவி மக்களே.
தமிழகத்திற்கு தண்ணீர் தருவதால்தான் கர்நாடகத்தின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறதா ? ஏன் அங்கு குடிநீர் பாட்டில்கள் விற்கும் நிறுவனங்கள் இல்லையா ? கோகோகோலா பெப்சி போன்ற வெளிநாட்டு கம்பனிகளின் தொழிற்சாலை இல்லையா ? அவர்கள் உறியாததையா தமிழர்கள் உறிய போகிறார்கள் ? காவிரியின் துணை ஆறுகளை வற்றவிட்டது யார்குற்றம் தமிழரின் குற்றமா ? காடுகளை அளித்து ஈஸ்டேடுகலாக மாற்றி பண முதலைகளை கோழிக்கவிட்டு, ஒரு வேலை சாப்படிற்காக எங்கும் தமிழக விவசாயிகளின் வயிற்றில் கைவைத்தால் அது என்ன நியாயம் ? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்த நீர் இப்போது இல்லை என்றால் அது யார் குற்றம்! தமிழகம் முழுவதும் அடித்த காற்றுதான் மேற்கு தொடர்ச்சி மலையில் பட்டு குளிர்ந்து மழையாக பொழிந்து ஆறாக பெருகுகிறது. அது தமிழனின் காற்றில் இருந்து வந்த நீர் அது வேண்டாம் என்றுதானே இனவெறியர்கள் சொல்லவேண்டும்.
சேர சோழ பாண்டிய பல்லவர்களாக இருந்த நாம், நமக்குள் சண்டையிட்டு சண்டையிட்டு தான் ஒரு பேரரசை அமைக்க முடியாமல், சிற்றரசாக சிதறி, முகலாயர்களுக்கும் மராத்தியர்களுக்கும் வெள்ளையருக்கும் அடிமைப்பட்டு இப்பொழுது இந்த நிலையில் இருக்கின்றோம். இன்னும் நம்முள்ளான இனவெறி குறைந்தபாடில்லை. எங்கோ இருந்து வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆலைகளுக்கும் தண்ணீர் கொடுக்கும் நம்மால், நம் சகோதரனான பக்கத்துக்கு மாநில காரனுக்கு கொடுக்கும் தண்ணீரில் சரியான ஒப்பந்தம் இட முடியவில்லை. தமிழ்நாட்டிற்கான உரிமை என்பதை தாண்டி, மனிதாபிமான அடிப்படியிலாவது கன்னடர்கள் நடந்துகொண்டிருக்க வேண்டும்.
சரி இனி நமது மாநிலத்திற்கு வருவோம், கடைசி நீர்த்தேக்கம் எப்பொழுது கட்டப்பட்டது என்று யாருக்காவது தெரியுமா ? நீர் மேலாண்மையில் நாம் கடைசி இடத்தில் தான் இருப்போம் என்று நினைக்கிறேன். இங்கு மணல் அள்ளவே நேரமிருப்பதில்லை இதில் நாம் எங்கு போய் நீர் மேலாண்மை பற்றி யோசிக்க. ஆறுகளை ஒட்டி தொழிற்சாலைகள், குளங்களையும் ஏரிகளையும் நிரப்பி கட்டிடங்கள், இப்படியிருக்க நாம் எங்கு மழைநீரை சேகரிக்க ? சென்னையில் அப்படி ஒரு அழிவை சந்தித்தும்கூட நமக்கு புத்திவரவில்லை. இலவசத்திற்கு அலையும் ஈனப்பிறவிகள் தானே நாம். ஏரி குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டெடுக்க வக்கில்லாத நாம் எப்படி காவிரியில் தண்ணீர் தராததை பற்றி நெஞ்சை நிமிர்த்தி கேள்வி கேக்க முடியும் ? நமக்கு காவிரியில் உரிமை இருக்கு ஆனால், அதை போராடி பெரும் அளவிற்கு கொண்டுவந்ததிற்கு இதுவும் ஒரு காரணமாகி போனது.
தண்ணீர் வேண்டும் என்று போராடிய விவசாயிகள் ஆற்றுபடுகையில் உள்ள தொழிற்சாலைகளை பற்றி ஏன் மறந்து போனார்கள், கர்நாடகம் தண்ணீர் தந்தாலும் அவர்கள் உறுஞ்சிய மிச்சம் தானே விவசாய நிலத்திற்கு வந்து சேரும் ? கோகோகோலா பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு நீர் எடுக்கும் உரிமையை கொடுத்துவிட்டு, டெல்டா பகுதி மக்களின் நிலங்களை பாதிக்கும் மீதேன் திட்டத்தையும் எரிவாயு குழாய் பாதிக்கும் திட்டத்தையும் ஒத்துக்கொண்டு இப்பொழுது காவிரியில் நீர் வேண்டும் என்று கர்நாடகத்திடம் போராடி என்னபயன். காவிரி நீர் வேண்டும் என்று போராடிய நாம், ஏன் ஆறு தூர் வாறுத்தல் பற்றியோ, மணல் கொள்ளை தடுப்பு பற்றியோ எந்த கேள்வியும் அரசிடம் கேக்கக் முடியாமல் இருக்கிறோம் ? எல்லா இடங்களிலும் அரசியலும் லஞ்சமும் நிரந்து இருக்கின்றன. நாமக்கு சாதி சண்டையிடவே நேரம் சரியாக இருக்கிறது. தமிழகள் தாக்கப்பட்டதை கண்டித்து நடந்த வேலை நிறுத்தத்தில், முகநூலில் பொங்கிய நாம் (நானும் சேர்த்துதான்) அரக்க பறக்க அலுவலகம் சென்றோம். இவ்வளவு தான் நம் ஒற்றுமை. நமது நீர் மேலாண்மையை மேன்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, மணல் அள்ளுதலை தடுத்து, மரங்களை நாம் வளர்த்தாலே நமக்கு தேவையான நீரில் பாதியை பெற முடியும். அரசு மக்களின் நலனை என்னும்போது எல்லாம் சரியாக நடக்கும்.
இரு மாநிலத்திலும் விவசாயிகளை கொண்டு ஒரு குழுமம் அமைத்து எந்த எந்த சாகுபடிக்கு எந்த எந்த மாதத்தில் எவ்வளவு நீர் வேண்டும் என்று பேசினாலே பாதி பிரச்சனை தீருமே. எந்த ஒரு விவசாயியும் தான் பயிர் அல்ல, பக்கத்துக்கு காடுகாரன் பயிர் கூட தண்ணீர் இன்றி கருக ஒப்புகொள்ளமாட்டன். பயிர் அவனுக்கு ஒரு விற்பனை பொருளல்ல, பிள்ளை போன்றது.
இறுதியாக பொன்னி நமக்கு அன்னை, அவளை பங்குபோட வேண்டாம், அவளது பாசத்தை மட்டும் பங்குபோட்டுகொள்வோம்.
—
குமார் பரமேஸ்வரன்
Related
அண்மை பதிவுகள்
வகைகள்
- அறிமுகம் (1)
- அறிவியல் (2)
- இணையம் (2)
- எண்ணவோட்டங்கள் (8)
- புதினம் (1)
- மரகத கோட்டை (1)
Leave a Reply