பெண்கள் மீதான தாக்குதல்
பெண்களின் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான காரணத்தை கண்டு களையாமல் வெறுமனே ஆணாதிக்கம் என்று கூப்பாடு போடுவதால் ஒன்றும் நடந்துவிடாது. பெண்ணின் மீதான தாக்குதல்களுக்கு காரணம் யார் என்று வெளிப்படையாக பார்த்தால், அது ஆணை மட்டுமே சாரும். ஆனால் 20% குற்றம் வேண்டுமானால் அவனை மட்டுமே சார்ந்து இருக்கலாம், ஆனால் மீதி இந்த சமுதாயத்தை சார்ந்தேயிருக்கிறது.
பெண்கள் என்றாலே பொதுவாக காதலித்து ஏமாற்றுபவர்கள் என்ற எண்ணத்தையும், அதற்கு ஆண்கள் பழிவாங்க வேண்டும் என்பதுபோன்றும் சினிமாக்களும் சீரியல்களும் குழந்தை முதலே ஊட்டி விடுகின்றன. பெண்ணை எல்லா இடங்களிலும், சாதாரண மசாலா விளம்பரம் முதல் பெரிய கடையின் திறப்புவிழாவரை ஆபாசமாக காட்டிவிட்டி, அவனுள் இருக்கும் காமத்திற்கு எண்ணை ஊற்றி எரியவிட்டு, நீ எதிர்வரும் பெண்ணை சகோதரியாகவும் தாயாகவும் பார்க்கவேண்டும் என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.
உணர்சிகள் எல்லோர்க்கும் பொதுவானதே, ஆனால் ஆண்கள் வளர்ந்த நிலையும் சுற்றமும், அவனுக்கு எல்லையற்ற அதிகரத்தை கொடுக்கிறது. அதனால் அவன் எதற்கும் துணிகிறான். பெண்கள் சில கட்டுப்பாடுகளுடன் வளர்வதால் தவறுகள் செய்வதற்கான சாத்தியகூறுகள் மிகவும் குறைகிறது, அதாவது அவள் பெரும்பாலும் எது தவறு எது சரி என்று பகுப்புகளை வயதிற்கு வந்தது முதலே கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறாள். இங்கு தவறு யார்மேல் என்பதை விட தவறுக்கு எது காரணம் என்று களைவதிலேயே, பெண்கள் மீதான வன்முறை தாக்குதலை குறைக்க முடியும். பெரும்பாலும் தவறுக்கு காரணம் என நான் நினைப்பது சுழல் மட்டுமே. நாம் வளரும் சூழல் நம்மை எதற்கும் துணியச்செய்யும். உதாரணமாக தந்தை புகைபிடிப்பார் எனில், அதனை கற்றுக்கொள்ள மகன் வேறு எங்கும் போக தேவையில்லை. நம் சுற்றமும் சூழலும் மட்டுமே நம்மை வார்த்தெடுக்கிறார்கள்.
அந்தந்த வயதில் வரும் ஆசைகள் இயற்கையின் நியதி. அதற்கு முட்டுகட்டையிட்டால் வரும் விளைவு கொடூரமானதாகவே இருக்கும். ஒரு அணையில் நீரை ஓரளவு மட்டுமே தேக்க முடியும், அளவுக்கதிகமாக தேக்கினால் அது ஓரிடத்தில் உடைத்துக்கொண்டு ஓடவே செய்யும். அதே நேரத்தில் அந்த நீரை விளை நிலத்திற்கு திருப்பி சரியான காலங்களில்விட்டால், அதன் பலன் நாம் நினைப்பதை விட அதிகமாக இருக்கும், ஆசைகளும் அதுபோலவே. அந்த செயலை செய்யவேண்டியது நம்முடைய சூழல். அதாவது நம்முடைய பெற்றோர்களும் ஆசிரியர்களுமே. நம்முடைய வயதை தாண்டி வந்தவர்கள்தான் அவர்கள், நம்மை விட அதீத அனுபவங்கள் அவர்களுக்கு இருக்கும். அப்படி அவர்கள் வழிநடத்தாதபட்சத்தில் அணை உடைந்த நிலைதான் நமது வாழ்வும், போகுமிடமெங்கும் அழிவை உண்டாக்கி யாருக்கும் பயனற்று போகும்.
குற்றம் என்று சாற்றும்பட்சத்தில், அது அனைவரையுமே சேரும். முகநூலில் ஒரு பெண் பகிர்ந்திருந்தது, “என் உடை என் உரிமை”. அதே போல் ஒரு ஆணும் சொல்லமுடியாதா என்ன ? “என் பார்வை என் உரிமை”. அப்பொழுது அவனை நாம் குற்றம் சொல்லமுடியுமா ?
நான் ஒருமுறை சாலையை கடக்க அதன் இடப்புறமாக நின்றிருந்தேன். அது ஒரு இருவழிச்சாலை. அப்போது ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாலையை எனக்கு இடமிருந்து வலமாக கடக்க முற்பட்டார். அதாவது சாலையின் வலப்புறம் பயணித்தார், கொஞ்சம் இல்லைஎன்றால் என்மீது மோதியிருப்பார். என் நண்பனால் காப்பற்றப்பட்டேன். அப்பொழுது என் நண்பனிடம் சொன்னேன், என்மீது தவறு இல்லை, அவன் தவறான பாதையில் வந்தான். அதற்கு என் நண்பன் சொன்னான், யார் மீது சரி யார்மீது தவறு என்பது இங்கு முக்கியமில்லை. அவன் இடித்து, உனக்கு அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்து அதன் செலவு முழுவதும் அவனே ஏற்றாலும், உனக்கு இருக்கும் வலியையும், வீணாகும் நாட்களையும் யார் ஏற்பது ? அதாவது என்மேல் தவறே இல்லையென்றாலும் நான் பாதிக்கபடுகிறேன் என்னும்பொழுது, நான் என்பாதுகாப்பை உறுதிசெய்வதே சிறந்தது.
அதைப்போலத்தான், பெண்கள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள என்ன செய்யவேண்டுமோ அதை செய்யவேண்டும். பெண்களுக்கு வெளியே இருந்து வரும் பாதிப்பைவிட கூட இருப்பவர்களாலேயே பாதிப்பு அதிகம் இருக்கும், அதாவது அவர்களை நன்கு அறிந்தவர்லாலேயே இருக்கும். இப்பொழுது இருக்கும் பெண்களில் பலர் சேலையை ஒரு அடிமையின் சின்னமாக பார்க்கதொடங்கிவிட்டார்கள். தெளிவான மனநிலையில் உள்ள ஒரு ஆணை, சேலை கட்டிய ஒருபெண் கையெடுத்து வணங்க வைக்கவும் முடியும், கலவிக்கு அழைக்கவைக்கவும் முடியும். அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதிலேயே இருக்கிறது.
பெண்கள் அணியும் உடை அவரது தனிப்பட்ட உரிமைதான், இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் அது மற்றவரது கண்களை உறுத்தாமல் இருக்கவேண்டுமில்லையா ?
ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் காதலும் காமமும் வருவதற்கு காரணம் இயற்கை. மற்ற உயிரினங்களில் அதன் இனத்தை விருத்திசெய்யும் ஒரு செயல், ஆனால் மனிதனுக்கு அது வாழ்க்கை. அதன் பொருட்டே நம்முன்னோர்கள் சில பழக்கவழக்கங்களையும் நெறிமுறைகளையும் வகுத்து வழிகாட்டியுள்ளனர்.
கேமரா பொருத்தப்பட்ட செல்போன்கள் வந்தபிறகு, பெண்களின் மீதான தாக்குதல் வேறொரு வடிவத்தை எடுத்திருக்கிறது. அதைபற்றி சொல்லவேண்டுமெனில் அதற்கு தனிப்பதிவே வேண்டும். இவை அத்தனைக்கும் ஒரு எளிய தீர்வாக எனக்கு படுவது, எப்பொழுது பெற்றோர்களும் ஆசிரியர்களும் நண்பர்களாக குழந்தைகளை பாவிக்கிறார்களோ அப்பொழுது அனைத்தும் சரிசெய்யப்படும். எந்த தாக்குதலும் தொடங்கும் பொழுதே பெரிதாக இருப்பதில்லை, மிக சிறியதாகவே ஆரம்பிக்கின்றன, பெற்றோர்கள் நண்பர்களாகும்பொழுது தங்களுக்கு வரும் பிரச்சனைகளை பகிர்ந்துகொள்வார்கள், பெற்றோர்களும் சரியான முறையில் அதனை எதிகொள்வர்கள். பெரிய தாக்குதலுக்கு வழியில்லாமல் போகும்.
ஆனால் ஓன்று நிச்சியம், பெண்களின் மீதான வன்முறை குறைய சமுதாயம் சரியாக இருக்கவேண்டும், காமமே பெரும்பாலும் வன்முறைக்கு காரணமாக அமைகிறது ! காமத்தை பற்றிய தெளிவை அந்தந்த வயதில் குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதற்கு பொறுப்பேற்கவேண்டும். ஆண்கள் பெண்களின் பாதுகாவலர்கள் என்பதை உணரவேண்டும், காமம் என்பது உணர்வு, அதை துண்டும்படியான உடைகளை பெண்களும் தவிர்க்க வேண்டும்.
—
குமார் பரமேஸ்வரன்
Related
அண்மை பதிவுகள்
வகைகள்
- அறிமுகம் (1)
- அறிவியல் (2)
- இணையம் (2)
- எண்ணவோட்டங்கள் (8)
- புதினம் (1)
- மரகத கோட்டை (1)
Leave a Reply